தேசிகரும் கம்பரும் சில ஒற்றுமைகள்
பகுதி -2
4. *நரசிம்ம அவதாரத்தில் வியந்து நிற்றல்* :-
வேதாந்த தேசிகர்:-
*கஃசி தத்புத கேஸரி* என காமாஸிகாஷ்டகம் எனும் பிரபந்தத்தில் வேளுக்கை நரஸிம்மரை துதிக்கும் பொழுது வியந்து அத்புத கேஸரி - அதி அற்புதமான ஓர் சிங்கம் (அவதாரம் )என்கிறார்.
கம்பர் :-
*பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும் அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்? கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்*.
நரஸிம்மனாய் பெருமாள் அவதரித்த பொழுது வானமே கிழிந்தது என கம்பர் வியக்கிறார்.
இது மட்டுமல்லாது பல பாசுரங்கள் நரசிம்மர் மேல் பாடி வியந்துள்ளார் கம்பர் இரணிய வதைப் படலத்தில்.
பாடி முடிக்கும் பொழுது அதற்கு ஆம் என்று சாட்சியாக சிங்கப்பெருமானே சிரித்தார்.
ஏன் இந்த வியப்பு இவ்விருவருக்கும் :-
*முதல் மூன்று அவதாரங்கள் விலங்குகளாக எடுத்தார்.(மச்ச,கூர்ம,வராக)
*வாமன ,பரசுராம,ராம,பலராம (ம) க்ருஷ்ண அவதாரங்கள் மனிதனாக எடுத்தார்.
*ஆனால் நரசிம்மராய் தோன்றும் பொழுது - பெயரிலேயே உள்ளது . மனிதனும் சிங்கமும் சேர்ந்தாற் போல் ஒரு ஸ்வருபம் .
தேவ , அசுர, மனிதர்கள் யாவும் கண்டிராத ஓர் ஸ்வரூபம்.
' யத்ருச்சா ஹரே ' என்கிறார் ஸ்வாமி தேசிகர் எதிர்பாராத விதமாக (எதர்ச்சியாக) எடுத்த ஓர் அவதாரம்.🙏🏻🙏🏻
ஏனைய அவதாரங்களை விட ஓர்படி பெருமை மிக்கது நரஸிம்மாவதாரம்.
*5.நாகமும் கருடனும்* :-
*வேதாந்த தேசிகர்*
*சங்கபாலன்* என்பவர் நவ நாகங்களில் ஒருவராவார். இவர் காசிபர் முனிவரின் தர்மபத்தினிகளில் ஒருவளான கத்துருவிற்கு பிறந்த முதல் ஒன்பது நாகங்களில் ஒருவர். காஞ்சிக்கு வேதாந்த தேசிகர் சென்ற பொழுது சிலர் துர்போதனைகளால் பாம்பாட்டி ஒருவர் தேசிகர்மீது கொடிய பாம்புகளை ஏவினார். தேசிகர் ஏழு கோடுகளை தரையில் கீறினார் . நாகங்கள் அதை தாண்டி வர இயலாது பின் வாங்கின.
அவற்றில் சங்கபாலன் மட்டும் அக்கோடுகளைத் தாண்டி ஸ்வாமி தேசிகரை நெருங்கினான். சங்கபாலனை *கருட தண்டகம்* பாட ,
பெரிய திருவடியாம் கருடன் சங்கபாலனை தூக்கி சென்றார்.
அந்த பாம்பாட்டி தன் தவறை உணர்ந்து தேசிகரின் திருவடிகளை வணங்க தேசிகரும் *கருட பஞ்சாசத்* பாடி அந்நாகத்தை மீட்டுக் கொடுத்தார் ஸ்வாமி .🙏🏻🙏🏻
*கம்பர்*
தன் இராமாவதாரத்தை இயற்றிய கம்பர் திருவரங்கத்தில் அரங்கேற்றியது அனைவருக்கும் தெரியும் . திருவரங்கம் மட்டுமல்லாது வேறொரு தலத்திலும் அரங்கேற்றம் செய்வித்தார் கம்பர். வைணைவத்தில் தலையாயது திருவரங்கமோ அதுபோல சைவத்தின் தலைநகர் தில்லை எனும் சிதம்பரம் . அங்கும் சென்று தில்லை மூவாயிரவர் எனும் 3000 தீட்சிதர்களுக்கு முன் அரங்கேற்றினால் தான் இராமாயண அரங்கேற்றம் நிறைவு பெறும் எனக் கூறிய பெரியோர்களுக்கு இணங்க தில்லை சென்றார் கம்பர். 3000 தீட்சிதர்களையும் தனித்தனியாக பார்த்து அரங்கேற்றுவது கடினம். ஒன்றாக அரங்கேற்ற நினைத்த கம்பருக்கு அதற்கான பொழுது சரியாக அமையவில்லை.
ஒரு முறை தீட்சிதர் மகன் ஒருவனை பாம்பு தீண்ட 3000 தீட்சிதர்களுக்கு ஒன்றிணைய அரங்கேற்றம் செய்ய கம்பரும் அவ்விடம் அடைந்தார். அரங்கேற்றம் செய்ய இதுதான் நேரமோ என்று வினவினர் தீட்சிதர்கள். கம்பர் தனது இராமாயணத்தில் நாக பாசப் படலத்தை பாட அச்சிறுவன் உயிர்ப்பித்து எழுந்தான் அந்நேரம் வானில் கருடன் வட்டமிட்டார்.
இராமாயணம் தில்லையில் அரங்கேறியது வரவேற்பும் கிடைத்தது..
*நாக பாச படலத்தில் இந்திரசித்தின் நாகாஸ்திரத்தில் தன் சுயநினைவிழந்த இராம இலட்சுமணர்களை காக்க கருடன் இலங்கை சென்றது குறிப்பிடத்தக்கது* .
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
- பாலாஜி

